Breaking News

சரக்கு கப்பலுடன் மோதிய பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

பிரிட்டன் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் எச்.எம்.எஸ். ஆம்புஷ். இக்கப்பல் செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சிக்காக ஜிப்ரால்டர் நோக்கி புறப்பட்டது. அப்போது, வர்த்தக சரக்கு கப்பல் மீது மோதியது. இதில், அணுசக்தி கப்பலின் செலுத்து கோபுரத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த கப்பல் ஜிப்ரால்டர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. 

இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலின் வெளிப்பகுதியில் மட்டுமே சேதம் ஏற்பட்டதால், அதில் உள்ள அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து கடற்படை விசாரணையை தொடங்கி உள்ளது. 

விபத்துக்குள்ளான இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் 97 மீட்டர் நீளம் கொண்ட, மிகப்பெரிய தாக்குதல் கப்பலாகும். இரண்டு ஆண்டுகள் கடல் ஒத்திகைக்குப் பிறகு கடந்த 2013ம் ஆண்டு இது கடற்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 2000-ம் ஆண்டு எச்.எம்.எஸ். டயர்லெஸ் என்ற அணுசக்தி நீர்மூழ்கி பழுதடைந்து ஜிப்ரால்டர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அணு உலையின் அருகில் உள்ள குளிர்விக்கும் பைப்பில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. கப்பலை அங்கு பழுதுபார்க்கக்கூடாது என வலியுறுத்தி ஜிப்ரால்டர் மற்றும் தெற்கு ஸ்பெயினில் போராட்டங்கள் நடைபெற்றன.