"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போம்'
"ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போம்'' பலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதுவர் பௌஸான் அன்வர்
( நஸீஹா ஹஸன்)
ரமழான் உணர்த்தும் உன்னதமான படிப்பினைகளை எமது வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள பலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதுவர் பௌஸான் அன்வர், ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் இறுகப் பிடித்துக்கொள்வோமானால் எமக்கெதிரான சக்திகளை முறியடிக்க முடியும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைத் திருநாட்டின் மீது முஸ்லிம்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் இங்கு நிம்மதியாகவும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றோம். இந்நிலை தொடர வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்திக்கின்றேன்.
அதேவேளை, இது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பௌத்த நாடு என்ற ரீதியில் பிற மத சகோதரர்களுடனும் நாங்கள் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எமது செயற்பாடுகளை நாங்கள் சீர்செய்து கொண்டு ஒழுக்க சீலர்களாக முன்மாதிரி மிக்க சமூகத்தினராக இருக்க வேண்டும். இதற்கான பாடங்களையும் ரமழான் எமக்கு செயற்பாட்டு ரீதியில் கற்றுத்தருகின்றது.
இத்திருநாளில் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஈத் முபாரக்!. நாட்டில் இன நல்லிணக்கம் சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்கள் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதற்கும் இத்திருநாளில் அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.