Breaking News

பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுக்க இலவச பயணச்சலுகை Cebu Pacific Airlines

துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக பயணிக்க Cebu Pacific Airlines நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.

அக்டோபர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொல்லியிருந்ததால் துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்ல முடிவெடுத்திருக்கிறார் அந்த பெண். துபாயிலிருந்து, மணிலாவை நெருங்க 5 மணி நேரம் இருக்கும்போது பிரசவ வலியால் துடித்திருக்கிறார். அப்போது விமானம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. விமான பணிப்பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்றபோது, அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் இருந்த இரண்டு செவிலியர்கள் உதவிக்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதே விமானத்தில் இரண்டு பேர் கைக்குழந்தைகளோடு பயணித்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த புதிய துணிகளை புதிதாக பிறந்த குழந்தைக்கு கொடுத்து உதவியுள்ளனர்.

இந்திய வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது உடனடியாக அருகில் உள்ள ஐதராபாத் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்ததும் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

பின்பு விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்களின் சோதனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதால் தொடர்ந்து பயணிக்கலாம் என சொன்ன பிறகு 9 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் பிலிப்பைன்சிற்கு கிளம்பியிருக்கிறது. விமானம் தாமதமானதற்கு எந்தவொரு பயணிகளும் எதிர்ப்போ, புகாரோ செய்யவில்லை.