Breaking News

சிறைக்குள் சிகையலங்காரம் !

குற்றம் செய்தவர்கள் தண்டனை பெற்று சிறைகளில் வைக்கப்படும்போது அவர்கள் வெளியுலகை காண முடியாது. சிறை வாழ்க்கை ஒரு அழுத்தமான மனநிலையையே ஏற்படுத்தும். நவீன காலத்தில் சிறைக்கூடங்கள் குற்றங்கள் புரிந்தவர்களை மாற்றும் கல்விக்கூடங்களாக மாறி வருகின்றன.

சிறைகளில் பலர் வெளி உலகில் இருப்பது போலவே வேலைகள் செய்வது,உணவு தயாரிப்பது,விவசாயம் செய்வது என பல தொழில்களை செய்ய வைப்பதற்கு சிறை நிர்வாகமே ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது.

இது தண்டனை பெற்றவர்கள் விடுதலையான பின்பும் சுய தொழில் செய்வதற்கும் வழிவகுக்கிறது. அவர்கள் திருந்தி வாழ்வதற்கும் இது வகை செய்கிறது.

அந்த வரிசையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட சிறையில் நவீன சலூன் கடை திறக்கப்பட்டுள்ளது. நல்ல நடத்தையுள்ள 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிகையலங்காரம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு நவீன வசதிகளுடன்(ஏ.சி.,போன்ற)கூடிய சலூன் கடை திறக்கப்பட்டது.

சிறையின் சுவரை ஒட்டி வெளிப்புறமாக தெரியும் சலூன் திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு திறக்கப்படும் இந்த சலு£ன் கடை மாலை 5.30க்கு முடப்படும். பலர் அந்த சலூன் கடைக்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் கதையை கேட்டுக்கொண்டே பலர் முடி வெட்டிக்கொள்வதாக கூறுகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் 50சதவீதத்தை வீட்டுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது.

இதனால் சிறை கைதிகளின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ்வதுடன் அவர்கள் விடுதலைக்குப்பின்னர் நல்ல வாழ்க்கையை தொடர வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை