ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் இந்திய வீராங்கனை தீபா ...
பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் தகுதி சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறியது. இதில் வால்ட், அன்ஈவன் பார்ஸ், பேலன்ஸ் பீம், புளோர் எக்சர்சைஸ் ஆகிய பிரிவுகளில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது சாகசங்களை காட்டி மெய்சிலிர்க்க வைத்தனர்.
இந்திய இளம் புயல் தீபா கர்மாகரும் இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்தார். நான்கு பிரிவுகளிலும் தீபா கர்மாகர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், வால்ட்டில் மட்டும் அவரது சாகசஜாலம் பிரமாதமாக அமைந்தது.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய தீபா கர்மாகர் இப்போது, தனிநபர் வால்ட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சரித்திர நிகழ்வுக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.