“அல்லா” என்ற பெயரை உச்சரித்ததிற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அமெரிக்க முஸ்லீம் தம்பதி
நாசியா மற்றும் பைசல் பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர். தம்பதியர் இருவரும் தங்களது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றிருந்தனர்.
விடுமுறையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து, அமெரிக்காவின் ஒஹியோவிற்கு திரும்ப, டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது, நாசியா தலைக்கு முக்காடு அணிந்திருந்தார்.
பைசலின் உடலில் வியர்வை கொட்டியதோடு, அவர் “அல்லா” என்ற வார்த்தையை உச்சரித்துள்ளார். இதனை கவனித்த விமான பணியாளர்கள், இதுபற்றி பைலட்டிடம் தெரிவித்தனர்.
அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த தம்பதியை விமானத்தில் இருந்து இறக்கி விட்டால் மட்டுமே விமானத்தை இயக்குவேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாவலர்கள் இருவரையும் அதில் இருந்து இறக்கிவிட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் இது குறித்து அமெரிக்க போக்குவரத்து துறையிடம் புகார் அளித்துள்ளது. விமான நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.