Breaking News

கிழக்கில் பாரிய இனப்பிரச்சினையொன்றை ஏற்படுத்த சிலர் சதி-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

கிழக்கில்  பாரிய   இனப் பிரச்சினையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்  சிலரால் திட்டமிட்ட  வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.

இந்த சதிகாரர்களுக்கு  கிழக்கில் உள்ள சில  அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குவது     தற்போது வெ ளிப்பட்டு வருவதுடன் அவர்களின்  உண்மையான  முகங்களை மக்கள் அடையாளங்காண்பதற்கு  இதுவே  சரியான தருணம் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

தற்போது  கிழக்கில் தலைதூக்கியுள்ள இனவாதம்தொடர்பில் வினவப்பட்ட போதே  முதலமைச்சர் ஹாபிஸ்  நசீர் அஹமட்தெரிவித்தார்.

அம்பாறை மற்றும்  திருகோணமலை  மாவட்டங்களில்  தமிழ் முஸ்லிம் மக்களின்  பூர்விக பகுதிகளில்  ஆங்காங்கே  திடீரென ளைக்கும் புத்தர் சிலைகள் மற்றும்  மட்டக்களப்பில்  பலவந்தமாக பௌத்த குடியேற்றங்களை நிறுவ  முனைதல்  ஆகிய விடயங்கள் சிறுபான்மை மற்றும்பெரும்பான்மை மக்களிடையே திட்டமிட்ட வகையில்   மோதலை  ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

யுத்தத்தைக் காட்டி தமது பிழைப்பை நடத்திய அரசியல்வாதிகளுக்கு யுத்தமொன்று இல்லாத போது தமக்கு அரசியல் நடத்துவதற்கு முடியாது  என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இனங்களிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்

இவ்வாறான செயற்பாடுகளை  அரசாங்கம்   முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில்  இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் போலியான கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்று அவர்களை குழப்பத்துக்கு உட்படுத்தி இலாபங்களை பெறுவதற்காகவே இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் கூறினார்.

கிழக்கை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு பாரிய திட்டங்களை வகுத்து செயற்பட்டு வரும் இவ்வேளையில் கிழக்கில் ஒரு பிரச்சினையை உருவாக்கி அவற்றுக்கு முட்டுக்கட்டை இடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் நாட்டிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்  இவ்வாறே சிலர்  நெருக்கடி கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களின் ஒத்துழைப்புடன் அவற்றை முறியடித்து கிழக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற தனது முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்