Breaking News

ஒரேதடவையில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இந்தியா சாதனை !!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. 

பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் திங்கள்கிழமை காலை 9.28 மணிக்கு தொடங்கப்பட்டது.

இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.