Breaking News

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி... மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி... மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல... 'எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்... ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல... வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!

ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது... தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.

''எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்

ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்'' என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.

''மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு... அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்'' என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.