Breaking News

நீர்கொழும்பில் 12 இலட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை கேந்திர மையமாகக்கொண்டு தீர்வை வரி செலுத்தப்படாது வெளிநாட்டு மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர் அவரது ஆடம்பர வாகனமொன்றுடனும் 12 இலட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்களுடனும் நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சந்தேக நபர் நீர்கொழும்பு பெரியமுல்லையில் வசிக்கும் 45 வயதுடையவராவார் 

அவர் தனது ஆடம்பர வாகனத்தைப் பயன்படுத்தி நீண்டகாலமாக இந்த வர்த்தகத்தில் இரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

சுற்றிவளைப்பின்போது ஜொனி வோகர் ரகத்தில் ஒரு லீற்றரும், விஸ்கி 186 போத்தல்களும் அத்துடன் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டொயோடோ பிரிமியோ ரகத்தைச் சேர்ந்த ஆடம்பர கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. காரின் பெறுமதி 60 இலட்ச ரூபாவாகும்.

கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் விமான நிலையத்திற்கு அண்மித்த பிரதேசமொன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேக நபர் சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மதுவரி உத்தயோகத்தரொருவர் வாடிக்கையாளர்போல் நடித்து வெளிநாட்டு மதுபானத்தை சந்தேக நபரிடம் கோரியுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் குறித்த மதுவரி உத்தயோகத்தருக்கு வெளிநாட்டு மதுபானத்தை விற்பனை செய்ய முற்பட்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வர்த்தகரான சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் திருமண வைபவங்களுக்கு மதுபானங்களை விநியோகித்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளதாக மதுவரி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். 

இந்த வகை மதுபானங்களின் சந்தை விலை 6,500 ரூபா அளவானதாகும் எனினும் சந்தேக நபர் இதனை 3200 ரூபாவுக்கே விற்பனை செய்துள்ளார். 

விமான நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் தீர்வை வரி செலுத்தப்படாத வெளிநாட்டு மதுபான வர்த்தகம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த மாதம் மாத்திரம் தீர்வை வரி செலுத்தப்படாத வெளிநாட்டு மதுபான போத்தல்கள் நாநூறுக்கும் அதிகமானவை கைப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.   

சந்தேக நபர் எதிர்வரும் 25ஆந் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளார். 

நமது நிருபர்