இன்று சர்வதேச யோகா தினத்தில் மோடி பங்கேற்பு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் இன்று 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்பட உலகம் முழுவதும் இன்று யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஐ.நா.வில் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு, செப்டம்பர் 27–ந் தேதி முதன் முதலாக ஐ.நா. பொதுச்சபையில் பேசினார்.
அப்போது அவர் இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா கலையினால் ஏற்படுகிற நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். அவர், ‘‘பழங்கால இந்திய கலாசாரத்தின் விலை மதிக்க முடியாத பரிசு யோகா. இது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கிறது’’ என கூறினார். ‘சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை ஐ.நா. வெளியிட வேண்டும்’ என கோரிக்கையும் விடுத்தார்.
அமோக ஆதரவு
மோடியின் கருத்துக்கு 47 முஸ்லிம் நாடுகள் உள்பட 177 நாடுகள் அமோக ஆதரவு தெரிவித்தன. ஐ.நா. சபை வரலாற்றில் இப்படி ஒரு ஆதரவு வேறு எதற்கும் இதுவரை கிடைத்ததில்லை.
அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள், 193 உறுப்புநாடுகளை கொண்ட ஐ.நா.வில் 177 நாடுகளின் ஆதரவுடன் ஜூன் 21–ஐ சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. சபையில் ஏகமனதாக நிறைவேறியது. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி.
முதல் யோகா தினம்
அந்த வெற்றியின் வெளிப்பாடாக, முதல் சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 650 மாவட்டங்களிலும், உலகின் 193 நாடுகளில் 192 நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. (போர் காரணமாக ஏமனில் யோகா தின கொண்டாட்டம் இல்லை.)
யோகா தின கொண்டாட்டத்திற்காக பீஜிங், லண்டன், துபாய், புடாபெஸ்ட், ஹோசிமின் சிட்டி, ஹாங்காங், போர்ட் லூயிஸ், பாரீஸ், ஜகர்தா, பெர்லின், டப்ளின், டால்லின், பொகட்டா உள்ளிட்ட நகரங்கள் உள்பட உலகமெங்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா.வில் கொண்டாட்டம்
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதில், பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுச்சபை தலைவர் சாம் குட்டேசா, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இதற்காக சுஷ்மா சுவராஜ், ஏற்கனவே நியூயார்க் புறப்பட்டு சென்று விட்டார்.
தொடர்ந்து டைம்ஸ் சதுக்கத்தில், யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்கிறார்கள்.
டெல்லியில் யோகா தினம்
தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் சர்வதேச யோகா தின விழா, இன்று பிரமாண்டமாக நடக்கிறது. காலை சரியாக 6 மணிக்கு சுமார் 40 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் குவிந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பல்வேறு யோகா குருக்களின் சீடர்களும் அடங்குவார்கள்.
பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள். பள்ளி மாணவர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பங்கேற்பு
சரியாக 6.45 மணிக்கு யோகா பயிற்சி தொடங்குகிறது. 35 நிமிடம் நடைபெறும். பிரசித்தி பெற்ற 15 யோகாசனங்கள் செய்து காட்டப்படும். இதற்காக விஜய் சவுக் தொடங்கி, இந்தியா கேட் வரையிலான ராஜபாதை முழுவதும் தரைவிரிப்புகள் போடப்படுகின்றன. இது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி யோகா பயிற்சி நிகழ்ச்சியாக அமையும்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவரது மந்திரிசபை சகாக்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். அதே நேரத்தில், இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி யோகா பயிற்சி மேற்கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நிகழ்ச்சிக்கு முன்னதாக எண். 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், யோகா பயிற்சி செய்கிறார். ராஜபாதை நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்யாவிட்டாலும், நிகழ்ச்சியில் அவர் பேசுகிறார்.
பலத்த பாதுகாப்பு
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களையொட்டி, டெல்லி ராஜபாதை முழுவதும் விழா கோலம் களை கட்டுகிறது. இதுவரை இல்லாத வகையில், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்து விடாதபடிக்கு தடுக்கிற வகையில், இந்திய விமானப்படை விமானங்கள் வானில் பறந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும். விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்திய கடற்படை கப்பல்களிலும் யோகா தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. ராணுவம், விமானப்படையினரும் யோகா தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
லண்டன், துபாய்
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில், நடக்கிற யோகா விழாவில் அந்த நாட்டில் உள்ள 30 யோகா, கலாசார அமைப்புகள் கலந்துகொள்கின்றன. தேம்ஸ் நதியின் தெற்கு கரையில் நடக்கிற விழாவில் இந்திய தூதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
துபாய் நகரில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தின்போது, அந்த நகரை சேர்ந்த ஸ்டான்லி ஈவன் என்பவர் நீண்ட நேரம் சிரசாசனம் செய்து சாதனை படைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.



