ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி செர்பியா ‘சாம்பியன்’
24 அணிகள் இடையிலான 20–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) நியூசிலாந்தில் கடந்த 30–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் ஆக்லாந்தில் நேற்று அரங்கேறிய இறுதிஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, புதுமுக அணியான செர்பியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தில் முதல் நிமிடத்தில் இருந்தே அனல் பறந்தாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பிற்பாதியின் 70–வது நிமிடத்தில் செர்பியாவின் ஸ்டானிஸ் மான்டிச் கோல் அடித்தார். 73–வது நிமிடத்தில் பிரேசில் பதில் கோல் திருப்பியது. மாற்று ஆட்டக்காரராக களம் கண்ட அந்த அணியின் ஆன்ட்ரீயாஸ் பெரீரா செர்பியாவின் பின்கள வீரர்கள் 4 பேரை தனியாளாக ‘தண்ணி’ காட்டி பந்தை கடத்தி அற்புதமாக கோலாக்கினார். வழக்கமான நேர முடிவில் (90 நிமிடம்) ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.



