நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் 27,000 தொன் மேகி நூடுல்ஸை அழிக்கவுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம், மேகி நூடுல்ஸ் என்னும் துரித உணவு பொருளை 9 வித சுவைகளில் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்தியாவில் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளை 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அதிக அளவில் காரீயமும், 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்னும் ரசாயன உப்பும் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதை சமைத்து சாப்பிட்ட சிலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறி பீகார், உத்தரபிரதேச மாநில கோர்ட்டுகளிலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மேகி நூடுல்சை ஆய்வக சோதனைக்கு உட்படுத்தி, அதில் அதிக ரசாயன பொருள் சேர்க்கப்பட்டு இருப்பதை உறுதி செய்த டெல்லி, குஜராத், தமிழ்நாடு, காஷ்மீர், உத்தரகாண்ட் மாநில அரசுகள் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.
மனிதர்கள் நுகர்வு கொள்ள முடியாத வகையில் மேகி நூடுல்ஸ் உணவு பொருட்களில் பாதுகாப்பற்ற மற்றும் தீங்குவிளைக்கக் கூடிய தன்மை காணப்படுகிறது. எனவே தனது இந்திய தயாரிப்பில் உள்ள 9 வித மேகி நூடுல்சையும், நெஸ்லே இந்தியா திரும்பப் பெற வேண்டுமென இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, நெஸ்லே நிறுவன தலைமை செயல் அதிகாரி பால் பல்கே சுவிட்சர்லாந்தில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அவசரமாக புறப்பட்டு வந்தார்.
அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
உலகம் முழுவதிலும் எங்களுடைய நிறுவன உணவுப் பண்டங்கள் தயாரிக்க கடைப்பிடிக்கும் முறையைத்தான் இந்தியாவிலும் பின்பற்றி வருகிறோம். எங்களது ஆய்வின் முடிவுகள் மேகி நூடுல்ஸ் முற்றிலும் பாதுகாப்பானவை என்று கூறுகின்றன.
எனினும் அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட நிகழ்வுகள் நுகர்வோரிடையே குழப்பத்தை உருவாக்கி விட்டது. இதனால் எங்கள் மீது நுகர்வோர் நம்பிக்கை தகர்ந்து போனது.
எனவே மேகி உணவுப் பொருட்கள் அனைத்தையும் இந்திய சந்தையில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்து இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நுகர்வோர் பாதுகாப்புக்குத்தான் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறோம். எங்களுடைய உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை என்ற நிலையிலும் அவற்றை விற்பனையில் திரும்பப் பெறுகிறோம்.
ஆய்வக சோதனை விஷயத்தில் இந்திய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம். விரைவில் இந்திய சந்தைக்கு மீண்டும் மேகியை கொண்டு வருவோம். நுகர்வோரின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி காணவேண்டும் என்பதில்தான் எங்களது கவனம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் மேகி நூடுல்சை திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்ட அதே நேரத்தில்தான் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பால் பால்கேயின் அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீகார், மத்திய பிரதேச மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்து உள்ளன.
நேபாளம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் மேகி நூடுல்சுக்கு தடை விதித்தன.
நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் மெகி நூடில்லை அழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தததை தொடர்ந்து சுமார் 400 மில்லியன் நூடுல்ஸ் உணவுப் பொதிகளை அந்த நிறுவனம் அழிக்கவுள்ளது.
அனைத்து மெகி நூடுல்ஸ் உணவுப் பொதிகளையும் அழிப்பதற்கு ஆகக் குறைந்தது 40 நாட்கள் செல்லுமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 27,000 தொன் மெகி நூடுல்ஸ்களை அழிக்கும் மிகப் பெரும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமது நிறுவனத்தினால் மாத்திரமல்ல ஒட்டுமொத்த உணவுக் கைத்தொழில் துறையில் முன்னொருபோதும் இல்லாத அளவு சந்தையிலிருந்து மீளப் பெறப்பட்ட பெருந்தொகை உணவுப் பொருள் இதுவாகும் என நெஸ்ட்லே இந்தியா தெரிவித்துள்ளது.
நமது நிருபர்
நமது நிருபர்



