Breaking News

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் தொடர் குண்டுவெடிப்பு: தாலிபான் இயக்கம் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததையடுத்து எம்.பி.க்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பட்டனர். குண்டு வெடிப்புக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தாலிபான் தீவிரவாத இயக்கம் சண்டையிட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவப்படைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்தும் தோல்வியிலே முடிந்தது. தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். நாடாளுமன்ற பகுதியில் அடுத்தடுத்து சுமார் 9 வெடிகுண்டுகள் வெடித்தது என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் மூன்று வெடிகுண்டுகள் வெடித்துள்ளது. வெடிகுண்டு வெடித்ததையடுத்து அவையில் இருந்த எம்.பி.க்கள் அலறியடித்து ஓடினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் விரைந்துவந்து சம்பவ பகுதியினை சுற்றிவளைத்தனர். வெடிகுண்டு தாக்குதல்களில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலைப் படையினரின் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையின் கண்காணிப்ப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் புதிய நடாளுமன்றத்தில் இருந்த இந்திய பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் குண்டு வெடித்ததைத் அடுத்து, துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் முழுவதும் கரும் புகைமூட்டம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.