Breaking News

வங்காளதேஷ் இல் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி இலவச உடைகள் வாங்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

வங்காளதேசத்தில் இலவச உடைகள் வாங்கச் சென்ற 24 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள்.

இலவச உடைகள் 

ரம்ஜான் பண்டிகையையொட்டி வங்காளதேசத்தில் உள்ள மைமென்சிங் நகரின் தொழில் அதிபர் ஷமீம் தலுக்தெர் ஏழைகளுக்கு இலவச உடைகள், வெகுமதி பொருட்களை தனது தொழிற்சாலையில் ஜூலை 10-ந்தேதி வழங்குவதாக அறிவித்து இருந்தார்.

இதனைக் கேள்விப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளியவர்கள் நேற்று அதிகாலை அவருடைய தொழிற்சாலையின் முன்பாக திரண்டனர். குழந்தைகளுடன் ஏராளமான பெண்களும் அங்கே குவிந்தனர். 

காலை 5 மணி அளவில் இலவச துணிகள் வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

முண்டியடித்து ஓட்டம்

அதைக் கேட்டதும், அந்த தொழிற்சாலையின் முன்பக்க சிறிய ‘கேட்’டின் வழியாக அனைவரும் ஒரே நேரத்தில் முண்டியடித்து கொண்டு ஓடினர். இதனால் கடுமையான நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 

அப்போது கீழே விழுந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்களை ஏறி மிதித்தவாறு ஏராளமானோர் ஓடினர். 

இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.

24 பேர் பலி

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 22 பேர் பெண்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மைமென்சிங் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதில், பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து இலவச உடைகள் வாங்குவதற்கு வந்த அமியா பேகம் என்ற பெண் கூறுகையில், தொழிற்சாலையின் ஊழியர்கள் கூட்டத்தினரை தடியால் அடித்து விரட்டியதால்தான் இந்த துயர சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

தொழில் அதிபர் கைது

இதனிடையே, இலவச உடைகள் வழங்குவதாக அறிவித்து ஏராளமானோரின் உயிர்ப் பலிக்கு காரணமாக இருந்த தொழில் அதிபரையும், அவருடைய தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சோக சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை வங்காள தேச அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

அனுதாபம்

ஜனாதிபதி அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

வங்காளதேசத்தில் 2002-ம் ஆண்டு இதேபோல் தங்காய் என்ற நகரில் நடந்த ஒரு சம்பவத்தில் 40 பேர் பலியானது, நினைவு கூரத்தக்கது.