Breaking News

சோதனைக் கடலில் கேப்டன் தோனி: கரை சேர்வது எப்படி?

புதுடில்லி: உலகின் மிகப்பெரிய, பிரமாண்டமான ‘டைட்டானிக்’ கப்பல் மூழ்கியது போல, சென்னை அணி தரை தட்டி நிற்கிறது. கேப்டன் தோனி தர்ம சங்கடமான நிலையில் உள்ளார். அணி மீண்டும் வரும் வரை காத்திருப்பாரா அல்லது வேறு அணிக்கு தாவுவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
கடந்த 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி, 34. இந்திய அணிக்காக 2007 (‘டுவென்டி–20’), 2011 (50 ஓவர்), 2013 (‘மினி’) என, மூன்று விதமான உலக கோப்பை வென்று தந்தது போல, சென்னை அணிக்காகவும் அசத்தியுள்ளார். இதுவரை நடந்த 8 பிரிமியர் தொடரில் 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்று தந்தார். கடந்த 2008, 2012, 2013, 2015ல் பைனலுக்கு முன்னேற காரணமாக இருந்தார். தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2010, 2014 ல் சாம்பியன் என, அசத்தல் கேப்டனாக உள்ளார். 
தொடர்ந்த சோதனை: இவ்வளவு சாதனை படைத்த இவருக்கு 2011க்குப் பின் சற்று சறுக்கல்கள் ஏற்பட்டன. சூதாட்ட விஷயத்தில் தோனியின் பெயரும் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது அடிபட்டன. 2012, 2013ல் பிரிமியர் தொடர் பைனலுக்கு முன்னேறிய போதும் கோப்பை இழந்தார். தொடர்ச்சியான தோல்விகளால், டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 
தற்போது சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் தோனி வேறு அணிக்காக விளையாடுவாரா அல்லது இந்த அணியில் நீடிப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
மற்றொரு பவ்வான்: ஏனெனில், இத்தாலி மற்றும் ஜுவண்டஸ் (உள்ளூர்) கால்பந்து அணி கேப்டனாக இருப்பவர் பவ்வான், 37. உலகின் சிறந்த கோல் கீப்பர். ‘சீரிஸ் ஏ’ தொடரில் இந்த அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது (2006) தெரியவர, தரம் குறைந்த ‘சீரிஸ் பி’ தொடரில் விளையாட கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், 2001 முதல் ஜுவண்டஸ் அணியில் உள்ள இவர், தொடர்ந்து இப்போது வரை இதே அணியில் நீடிக்கிறார்.
இதுபோல உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் தோனி, சென்னை அணியில் நீடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர். 
சென்னை நேசம்: ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ள இவர், பெரியளவில் காயம் ஏற்பட்டால் தவிர, சென்னை அணிக்கான போட்டிகளில் தவறாமல் களமிறங்கி விடுவார். அந்தளவுக்கு சென்னை அணியை நேசிக்கிறார். 
அதேநேரம் தோனி 2016க்குப் பின் பிரிமியர் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை அணியில் நீடிக்க விரும்புவாரா எனத் தெரியவில்லை. 
உரிமம் ரத்து: பிரிமியர் விதிப்படி,‘ சம்பந்தப்பட்ட அணி உரிமையாளர், அணியின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும் நிலையில் ஏதாவது தவறாக நடந்தால் உரிமர் ரத்து செய்யப்படும்,’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. கொச்சி, புனே அணிகளின் உரிமையாளர்கள் ‘பெட்டிங்’ செய்யாத நிலையிலும் வேறு காரணங்களுக்காக உரிமம் ரத்து செய்யப்பட்டது.
 தற்போது சென்னை, ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் குருநாத், ராஜ் குந்தராவுக்கு ‘பெட்டிங்’ காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏன் இந்த இரு அணிகளின் உரிமத்தையும் ரத்து செய்யக் கூடாது என, கேள்வி எழுந்துள்ளது.
பி.சி.சி.ஐ., வாங்குமா
பிரிமியர் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலை தான் தற்போது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை இந்த அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், தொடரில் பங்கேற்க அனுமதிக்கலாம். வீரர்களுக்கான சம்பளத்தை பி.சி.சி.ஐ., வழங்கும். 
அதேநேரம் பிரிமியர் தொடர் நடத்தும் போர்டே, அணியை நிர்வகித்தால், ஆதாயம் தரும் வகையில் செயல்படுகிறது என்ற சர்ச்சை எழும். இதனால் இந்த இரு அணிகள் விஷயத்தில் பி.சி.சி.ஐ., முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமாதான துாது
ஐ.சி.சி., தலைவர் சீனிவாசனுக்கும், பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் இடையே மோதல் உள்ளது. இதனிடையே சமீபத்தில் வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் நடந்த ஐ.சி.சி., கூட்டத்தில் இந்த இருவருக்கும் இடையே சமாதான பேச்சு நடந்ததாக தெரிகிறது. இதனால் அணியின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற பெரிய நடவடிக்கைளில் பி.சி.சி.ஐ., ஈடுபடாது என்று கூறப்படுகிறது. 
எப்போதும் ‘கூல்’ தான்
சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்ட போது, கேப்டன் தோனி, ஜார்க்கண்ட்டின் பொகாரோவில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளிக்கு சென்றார். இங்கு சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய இவர், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து எப்போதும் போல மிகவும் ‘கூலாக’ கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை பேசி மகிழ்ந்தார். 
சரியான நடவடிக்கையா
2013ல் சூதாட்ட சர்ச்சை வெடித்த போது, பி.சி.சி.ஐ., ஒழுங்கு நடவடிக்கைக்குழு, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மூலம் விசாரித்து, குருநாத் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்று கூறியது. இப்போது இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதே குழுதான் ஸ்ரீசாந்த், அன்கீத் சவானுக்கு வாழ்நாள் தடை விதித்தது. சமீபத்தில் ஹிக்கென் ஷாவை தடை செய்தது. தற்போது இந்தக்குழு எடுத்த நடவடிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.