Breaking News

தேர்தல் பிரச்சார ஒழுக்கவிதிக் கோவை வர்த்தமானியில் வெளியிடப்படும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களையோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களையோ குழுக்களாக தமது இல்லங்களுக்கு வரவழைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது, தமக்கு எதிரான கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இது போன்ற விதிமுறைகளைக் கொண்ட ஒழுக்கவிதிக் கோவையொன்று அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.


இந்த ஒழுக்கவிதிகளுக்கு அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதனை அங்கீகரிப்பதற்கான இறுதிக் கூட்டம் நாளை நடைபெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரதநாயக்க தெரிவித்தார். ஒழுக்கவிதிகள் மூலம் சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் வகையிலான தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடைவிதிக்கப்படுகின்றது அத்துடன் நிதி உதவி வழங்குவதாக வாக்குறுதியளித்தல், தேர்தல் காலத்தின்போது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், பதவிகளுக்கு நியமனம் வழங்குவதாக வாக்குறுதியளித்தல் போன்றவற்றிற்கும் இதன் மூலம் தடைவிதிக்கப்படுகிறது. 


லேட்பாளர்களுக்கான ஒழுக்கவிதிக் கோவைக்கான முன்மொழிவுகள் 2012ஆம் ஆண்டு தொடக்கம் கலந்துரையாடப்பட்டுவந்த போதிலும், அது வர்த்தமானியில் வெளியிடப்படுவது இதுவே முதறதடவையாகும் என ரதநாயக்க தெரிவித்தார். இது வரை அனைத்து அரசியல கட்சிகளும் இந்த ஒழுக்கவிதிக் கோவைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கு வேறு ஏதும் ஆட்சேபனைகள் இல்லாதிருப்பின், அது அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என ரதநாயக்க மேலும் தெரிவித்தார்.


இதுவொரு ஒழுக்கவிதிக் கோவையாக மாத்திரமே இருக்கும் இதற்கு சட்ட வரையறைகள் இருக்காது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சிப் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் வேட்பாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க அடிப்படையிலான ஒழுக்கவிதிக் கோவை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

சுமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வையும், பதட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிடுவதனை இந்த ஒழுக்கவிதிக் கோவை முற்றாக தடை செய்கின்றது. பொது நிதிகள் மற்றும் சொத்துக்கள் அல்லது அரச வளங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதையும் தவிர்துக் கொள்ளுமாறு இந்த ஒழுக்கவிதிக் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இந்த ஒழுக்கவிதிக் கோவையினை வரவேற்றுள்ளதோடு அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களுக்கு இதுபற்றி அறிவூட்டுதல் வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஒழுக்கவிதிக் கோவையினை வரவேற்பதாகவும், தமது கட்சி வேட்பாளர்கள் இவ்விதிகளைப் பின்பற்றுவார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 


'நல்லாட்சியினை ஏற்படுத்தி அதனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சி என்ற வகையில் நாம் இந்த ஒழுக்கவிதிக் கோவையினை பின்பற்றுதல் வேண்டும். அதிகாரத் துஷ்பியோகத்தில் ஈடுபட்ட கடந்த அரசாங்கத்தைப் போலல்லாது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் பொலீஸ் திணைக்களம் ஆகியவற்றின் பணிகளில் தலையிடமாட்டாது' எனவும் ஜயசூரிய சுட்டிக்காட்டினார். 
நமது நிருபர்