அச்சமில்லாத சுதந்திர சூழலில் மீண்டும் நோன்புப் பெருநாள்
இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ரமழான் மாத நோன்பை நிறைவேற்றி விட்டு இலங்கை உட்பட முழு உலகிலும் வாழும் முஸ்லிம்கள் தங்களது நோன்புப் பெருநாளை இப்போது கொண்டாடுகின்றனர். இது ஈகையையும் சகோதரத்துவ வாஞ்சையையும் பெரிதும் வலி யுறுத்தும் ஓர் நந்நாள். இந்நாளில் எவரும் உண்ண உண வின்றி இருந்திடலாகாது என்பது இப்பெருநாளின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் நோன்புப் பெருநாள். இறைவனின் கட்டளைக்கு ஏற்ப முஸ்லிம்கள் உணவையும் பானங்களையும் தவிர்த்து மன இச்சைகளைக் கட்டுப்படுத்திய படி ஒரு மாத காலம் நோன்பு நோற்கின்றனர். இதன் ஊடாக உடல் உள ரீதியாகச் சிறந்த பயிற்சி அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது. அது அவர் களது வாழ்வுக்குப் பெரிதும் பயன்படக் கூடிய பயிற்சியா கும். இவ்வாறு நோன்பு நோற்ற பின்புதான் இப்பெருநாள் அமைதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்படுகின் றது இது வழமையானது.
ஆனால் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஆயிரம் வரு டங்களுக்கும் மேலாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் கடந்த சில வருடங்களாகப் பலவிதமான நெருக்கடிகளுக்கும் அச் சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வந்தனர்.
குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் ரம ழான் மாத நோன்பை நோற்று பெருநாளையும் அச்சம் பீதி யுடனேயே முஸ்லிம்கள் கொண்டாடினர். தங்களது சமயக் கடமைகளை அச்சமின்றி சுதந்திரமாக மேற்கொள்ள முடி யாத நிலைமைக்கு அவர்கள் முகம்கொடுத்தனர். அவர்க ளது சமய கலாசார விழுமியங்கள் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருந்தன. அதனால் இந்நிலையிலிருந்து தமக்கு மீட்சி வேண்டி இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர அவர்க ளுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.
இவ்வாறான சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் நாட்டு மக்கள் அளித்த ஆணைக்கு ஏற்ப இந்நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். அவர் தலைமையில் நாட்டில் நல்லாட்சி மலர்ந்தது. அதன் ஊடாக முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர சமூகங்கள் முகம் கொடுத்து வந்த அச்சம் பீதியுடனான இருண்ட யுகம் அகன்றது.
அதன் பயனாகத் தான் அச்சமில்லாத சுதந்திரமான சூழலில் இந்நோன்பை அனுஷ்டித்து பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பை முஸ்லிம்கள் மீண்டும் பெற்றுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்நாட்டு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறு பான்மை மக்கள் முகம் கொடுத்த நெருக்கடிகளை சகல ருமே அறிவர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்பெருநாளின் நிமித்தம் விடுத் துள்ள வாழ்த்துச் செய்தியில் ‘இந்நாட்டு முஸ்லிம்கள் இவ் வருடம் அச்சமும் சந்தேகமுமின்றி நிம்மதியாகவும் சந்தோஷ மாகவும் சுதந்திரமாகவும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடு கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேநேரம் இந்த அச்சம் பீதியற்ற அமைதியான சுதந்திர சூழலை இந்நாட்டில் ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இலங்கை முஸ்லிம் மக் களின் மகிழ்ச்சிகரமான நோன்பு பெருநாளுக்கும், பாதுகாப்பு மிக்க செளபாக்கியமான எதிர்காலத்திற்கும் எனது நல்வாழ்த்துக் கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு முஸ்லிம் மக்கள் கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்திருந்த சூழ்நிலையை இவர்களது கூற்றுக்கள் நன்கு தெளிவுபடுத்துகின்றன. அதனால் அச்சம் பீதியற்ற அமைதி சமாதான சுதந்திர சூழலை மீண்டும் ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் தயாராகியுள்ளனர். அதனை ஒரு பொறுப்பாகக் கருதும் நிலைமை ஏற்பட்டுள் ளது. இது வரவேற்கத்தக்கது.
அதேநேரம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவப் புரிந்துணர்வையும் மேலும் கட்டியெழுப்பும் வகையில் இப்பெருநாளை அமைத்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமூக மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்லின மக்கள் வாழும் நாட்டில் இது மிகவும் அவசியமான விடய மாகும். இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
இதேவேளை இந்நாடு பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. இது இந்நாட்டுக்கு மிகவும் முக்கியமானதோர் தேர்தல். அத னால் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடனும் தூர நோக்கு டனும் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது. தேர் தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் கால வன்முறை களும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அத னால் பொறுப்புணர்வுடனும் தூர நோக்கோடும் சிந்தித்து ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் தொடர்ந்தும் வாழ்ந் திட ஒவ்வொருவரும் இந்நாளில் திட உறுதி கொள்ள வேண்டும்.
இந்த ஈகைத் திருநாளைக் கொண்டாடும் எமது அனைத்து வாசகர்களுக்கும் செளபாக்கியம் மிக்க எமது நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ஈத் முபாரக்!



