Breaking News

மஹிந்த குருநாகலிலும், கோட்டாபய கம்பஹாவிலும் போட்டி பஸிலுக்கு தேசியப்பட்டியல் ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்தினபுரி, குருநாகல் அல்லது கம்பஹாவில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்த போதிலும் குருநாகலில் போட்டியிடுவதற்கே அதிக விரும்பம் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

அவர் குருநாகலில் போட்டியிட்டால் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ கம்பஹாவில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் இதுவரை கருத்து வெளியிடவில்லை என்பது நோக்கத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பந்தோட்டையை கைவிட்டுச் செல்வதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன – ஒன்று தற்போது அங்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் அலை, இரண்டாவது காரணம் தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு இடமளிப்பது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முடிந்தால் பெலியத்தவில் போட்டியிட்டு வெற்றி பெறுமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன சவால் விடுத்துள்ளார். 

பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிதி ஒழுங்கீனக் குற்றச்சாட்டு காணமாகவும், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நாட்டைவிட்டு வெளியேறியதனாலும், மஹிந்தவின் தோல்விக்கு அவரே பிரதான காரணமாக இருந்ததனாலும, அவர் கம்பஹாவில் போட்டியிடுவது ஆபத்தானது என கூட்மைப்பினைச் சேர்ந்த பலர் தெரிவித்திருப்பதன் காரணமாகவும், அவர் தேர்தலில் போட்டியிட்டு பிரசன்ன ரணதுங்க போன்றோர் அவரை விட அதிக வாக்குகளைப் பெறுமிடத்து கூட்மைப்பின் பெயருக்கு பங்கம் ஏற்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் விருப்பத்திற்குரிய அணியொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுமிடத்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கும் முன்னாள் ஜனாதிபதியின் அணியில் தேசியப் பட்டியலில் இரண்டு உறுப்பினர் பதவிகள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டுமென இவர்களது தரப்பில் தற்போது கோரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  
நமது நிருபர்