பொலித்தின் மற்றும் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகள் தடைசெய்யப்படுவதால் மாற்றீட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்த வேண்டும் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
பொலித்தின் மற்றும் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகள் தடைசெய்யப்படுவதால் மாற்றீட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபையின் சுற்றுலா தகவல் மையத் திறப்பு விழாவின் இரண்டாம் நாள் கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய உணவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மக்கள் ஒன்றிணைந்துகொண்டு தங்களது பொழுதை சந்தேசமாகக் கழிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பல முயற்சிகளை ஈடுபட்டிருந்தபோதிலும் கட்டடங்கள் மட்டும் நிறைந்து இருப்பதனால் எந்த அழகும் வந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்து இந்த இடங்களிலெ;லாம் மக்களை கவர்ந்திழுக்கின்ற வகையிலே இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி நடாத்திக்கொண்டிருக்கின்ற மாநகர சபை ஆணையாளருக்கு இந்த மாவட்டத்தின் மக்கள் சார்பாக எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுத்தமும் அழகும் நிறைந்த நகரமாக மட்டக்களப்பு பிரகடனம்
இன்று இரண்டு முக்கியமான விடயங்களை கூற விரும்புகின்றேன். அவற்றுள் ஒன்று தேசிய புவியியல் அமைப்பினால் மட்டக்களப்பு நகரம் சுத்தமும் அழகும் நிறைந்த நகரமாக பிரகடனப் படுத்தப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து ஒரு செய்தி உங்களுக்கு சொல்லப்படுகின்றது. இந்த மாநகர சபையும், அதனுடைய ஆணையாளரும், அதன் உத்தியோகத்தர்களும் அயராது உழைத்து இந்த நகரை சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். இங்கே இருக்கின்ற நீங்கள் அனைவரும் அவரோடு இணைந்து இது உங்களுடைய சொத்து, இது உங்கள் பிள்ளைகள் வாழுகின்ற, விளையாடுகின்ற இடம் என்பதை நினைத்து இந்த பாரிய பணிக்காக நீங்கள் அவர்களோடு கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். எங்களுடைய நகரம், எங்களடைய பசுமையான நகரம் என்ற சிந்தனையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் கொண்டிருக்க வேண்டும்.
பொலித்தின் மற்றும் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கு தடை
இரண்டாவதாக மிக முக்கியமான செய்தியை மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்கள் பிரகடனப்படுத்தி இருக்கின்றார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் பொலித்தின் பாவனை இலங்கையில் முற்றாகத் தடை செய்யப்படவிருக்கின்றது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இலங்கையிலே உற்பத்தி செய்யப்படுகின்ற, இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று உலகிலே எதிர்நோக்கப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருப்பதும், சூழலையும், மண்ணையும், ஏனைய விலங்குகளையும் மனிதனையும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கச் செய்கின்ற பொலித்தின் பாவனை ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குள் தடைசெய்யப்படவிருக்கின்றது.
இது உங்களுக்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கின்றது. என்னவென்றால் இந்த மாவட்டத்திலுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தி இதற்கு மாற்றீடான தயாரிப்பொன்றை தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கான கேள்வி அதிகமாக இருக்கும் வளங்கள் குறைவானதாக இருக்கும். இந்த சந்தர்ப்பத்தினை கைப்பற்றிக் கொள்கின்ற உள்ளூர் உற்பத்தியாளர்கள் அவர்களோடு இணைந்து செயற்படுகின்ற பணியாளர்களும் அமைப்புக்களும் இந்தக் கருவை எண்ணத்திலே சுமந்து, அதற்காக உங்களை தயார் படுத்துவதற்கான நான்கு மாதங்கள் அவகாசம் உங்களுக்கு உள்ளது. ஆதனை நீங்கள் முழுமையாகப் பயன்படுதுவீர்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அம்பன் பிள்ளை, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்
எம்.ஐ.அப்துல் நஸார்



