Breaking News

25 வருடம் சினிமாவிற்காகவே தன்னை அர்ப்பணித்து விக்ரமின் சாதனை அன்று முதல் இன்றுவரை.

சினிமாவை ஒரு சிலர் மட்டுமே தொழிலாக மட்டுமின்றி உயிராக நினைப்பார்கள். அப்படிப்பட்ட கலைஞர்களில் விக்ரமும் ஒருவர். வெற்றி எப்போது கிடைக்கும் என டப்பிங் ஸ்டுடியோவில் முகத்தை மறைத்து பல முன்னணி கதாநாயகர்களுக்கு குரலாக மட்டும் வாழ்ந்தவர்.

இதே நாள் 1990ம் ஆண்டு வெளிவந்த என் காதல் கண்மணி படத்தின் மூலம் விக்ரம் திரையில் தோன்றினார். ஆனால், எங்கு சென்றாலும் அவருக்கு கிடைத்த ஒரு பதில் தோல்வி, தோல்வி, தோல்வி தான். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துப்பார்த்து விட்டார். ஆனால், வெற்றி மட்டும் அவரில் கையில் எட்டாக் கனியாக இருந்தது.

அஜித், பிரபுதேவா, அப்பாஸ் போன்ற கலைஞர்களுக்கு வெறும் டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்தே காலம் கழித்து விடலாம் என்று எண்ணாமல் மீண்டும் முழு மனதுடன் முயற்சியை தொடர்கிறார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல், இயக்குனர் பாலாவின் கண்ணீர் பல நடிகர்களுக்கு பிறகு விக்ரம் தெரிகிறார். பாலா, விக்ரமை சேதுவாக மாற்றுகிறார்.

நெகட்டிவ் கிளைமேக்ஸ், சோகம் என படம் முழுவதும் இருக்க, இந்த படம் எல்லாம் எங்கு ஹிட் ஆகும் என யாருமே படத்தை வாங்க முன்வரவில்லை. விக்ரமிற்கு அதிர்ஷ்டமே இல்லை என்று பலரும் கூற, அவரின் உழப்பிற்கு கிடைத்த வெற்றியாக இப்படம் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் தமிழகம் முழுவதும் வெளிவந்தது. விக்ரமின் நடிப்பு, பாலாவின் இயக்கம் என ரசிகர்களை கவர அதன்பின் என்ன, பட்டித்தொட்டியெல்லாம் படம் ஹிட் தான். இதை தொடர்ந்து தில், காசி, சாமி, தூள், பிதாமகன், அந்நியன் என தொடர் வெற்றிகளால் விக்ரம் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்திற்கு சென்றார், பிதாமகன் படத்திற்காக தேசிய விருதை கூட வென்றார்.

ஆனாலும், மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களின் தோல்வி அவர் மார்க்கெட்டை சோதிக்க ஆரம்பித்தது. மீண்டும் ஒரு அறிமுக நாயகனை போல் தன் உடலையே சினிமாவிற்காக கொடுத்து ஐ படத்தில் ஷங்கர் உடன் களமிறங்கினார். இப்படத்தில் இவர் நடிப்பை பாராட்டாதவர் எவரும் இல்லை. சிவாஜி, கமல் அடுத்து விக்ரம் என அனைவரையும் கூற வைத்து விட்டார். இனி என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என உடனே 10 எண்றதுக்குள்ளபடத்தில் பழைய மஜாவுடன் களமிறங்கி விட்டார் விக்ரம். அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இப்படமும் கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து 25 வருடம் சினிமாவிற்காகவே தன்னை அர்ப்பணித்து தவம் போல் வாழ்ந்து வரும் விக்ரம் இன்று தன் 26வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். இனி மீண்டும் விக்ரமின் வெற்றிப்பயணம் இதேபோல் தொடர  எமது வாழ்த்துக்கள்...