இலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு இரண்டாமிடம் திவிநெகும பணிப்பாளர் பி.குணரட்ணம்.
இலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாகவும் மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரிய உப்போடை கிராம சேவை பிரிவு சமுர்த்தி சங்கங்களில் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட திவிநெகும பணிப்பாளர் கலந்துகொண்டார்.
2015 ஆம் ஆண்டு புகைத்தல் தினத்தை முன்னிட்டு சேமிக்கப்பட்ட நிதியில் கூடுதலான நிதியினை சேகரித்த பெரிய உப்போடை கிராம சேவை பிரிவு சமுர்த்தி சங்கங்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் 80 % வீதம் நிதியினை வழங்கப்பட்டதை தொடர்ந்து பெற்றுக்கொண்ட நிதியினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜாவின் வழிகாட்டலுக்கு அமைவாக பெரிய உப்போடை சமுர்த்தி சங்கங்களில் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் பாடசாலை செல்லும் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சீலாமுனை சின்னையா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போது மாவட்ட திவிநெகும பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார் இலங்கையில் அதிகமான மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுவதால் இலங்கையில் வாழ்வாதார திட்டத்திற்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.
இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக மானியமாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 50 மில்லியன் ரூபா 5 வீத குறைந்த வட்டி வீதத்தில் வழங்குவதற்கு திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு மானியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே.நிர்மலா, இருதயபுரம் கிழக்கு வலய வங்கி முகாமையாளர் இ.குமுதினி ,வலய உதவியாளர் கே.குமணன் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.விஜெகுமார் மற்றும் பெரிய உப்போடை சமுர்த்தி சங்கங்களில் பயனாளிகளும், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.



