Breaking News

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் ஏற்பாட்டில்- தொழுகை பயிற்சி முகாம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி-பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ஒன்றை கடந்த 10 வியாழக்கிழமை காத்தான்குடி ஜூமைறா பெலஸ் கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தொழுகை பயிற்சி முகாமில் வுழு, தயம்மும் செய்யும் ஒழுங்குகள்,  அதான், இகாமத் சொல்லும் முறைகள், தொழும் ஒழுங்கு, அதில் ஓதும் அவ்றாதுகள், தொழுகை முடிந்த பின் மொழியும் திக்ர்கள் என பல்வேறு விடயங்கள் காணொளிகள், பயிற்சிகள், விளையாட்டுக்கள், கார்டூன்களினூடாக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பயிற்றுவிக்கப்பட்டது.

இதில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயதை அடைந்த மாணவர்களில் 105 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதோடு தாம் இன்று முதல் எம் மீது கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாக உறுதிமொழி வழங்கினர்.

அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி இம் முகாமின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தியதோடு இவ்வேளைத்திட்டம் முழு நாடு தழுவிய ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறார்களுக்காக அழகிய முறையிலும், எளிய நடையிலும் படவிளக்க வழிகாட்டலுடன் வடிவமைக்கப்பட்ட “வாருங்கள் தொழுவோம்” என்ற புத்தகமும் பிஸ்மி குழுமத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும் என்கின்ற தூர நோக்கில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை குறித்த தொழுகை பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.