Breaking News

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளருக்கு தெற்காசிய இலக்கிய விருது!

எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் தெற்காசிய விருது இந்த ஆண்டு, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் ஜே.எம்.சாலி இயற்பெயர் ஜமாலூதீன் முகம்மது சாலி. 76 வயதாகும் சாலி, சென்னையை பூர்விகமாக கொண்டவர்.

இவரது தந்தை வெற்றிலை-பாக்கு வியாபாரம் செய்துவந்தார். 25 வயதில் சிங்கப்பூர் சென்ற சாலி தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியராக பணியை தொடங்கினார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் தொலைகாட்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். அப்போது அவர் புரூஸ் லீ, குத்துசண்டை வீரர் முகம்மது அலி ஆகியோர் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் முழு நேர எழுத்து பணியில் கவனம் செலுத்தி வருகிறார். மொத்தம், 57 புத்தகங்கள், 80 நாடகங்கள் மற்றும் 400க்கும் அதிகமான சிறுகதைகளை சாலி எழுதியுள்ளார். அவர் எழுதிய 'வெள்ளை கோடுகள்', 'அலைகள் பேசுகின்றன' ஆகிய சிறுகதைகள் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாணவர்களளால் இன்றும் பயிலப்பட்டு வருகின்றன.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வரும் திங்கள் கிழமை நடைபெறும் விழாவில், ஜே.எம்.சாலிக்கு தென்கிழுக்கு ஆசிய இலக்கிய விருது வழங்கப்படுகிறது.