சக வீரர்களை கொன்று அவர்களது உடல் உறுப்புகள் விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஐ.எஸ். தீவிரவாதிகள் பணம் திரட்டுவதற்காக சக வீரர்களை கொன்று அவர்களுடைய உடல் உறுப்புகளை வெளிச் சந்தைகளில் விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது
சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்கள் பிடியில் உள்ள இடங்களை ஒவ்வொன்றாக ஈராக், சிரியா மற்றும் குர்தீஸ் படைகள் கைப்பற்றி வருகின்றனர்.
அமெரிக்கா கூட்டுப் படையின் விமான தாக்குதல் உதவியுடன் இந்த படைகள் முன்னேறி வருகின்றன. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வந்த பணம் மற்றும் உதவிகளையும் அமெரிக்க கூட்டுப் படையினர் தடுத்து விட்டனர். இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இதற்கு பணம் திரட்டுவதற்காக சக வீரர்களை கொன்று அவர்களுடைய உடல் உறுப்புகளை வெளிச் சந்தைகளில் விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த வீரர்களை இவ்வாறு கொல்வதாக அரபுமொழி பத்திரிக்கையான அல்சபா கூறியுள்ளது.
மொசூல் நகரில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கை கூறியுள்ளது.
காயமடைந்த வீரர்களின் சிறுநீரகம், இதயம் உள்ளிட்டவற்றை அகற்றும்படி அங்கிருக்கும் டாக்டர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். அதை செய்ய மறுத்தால் டாக்டர்களையும் அவர்கள் கொல்கிறார்கள் எனறு மொசூல் நகரத்தை சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்ததாக அந்த பத்திரிக்கை கூறியிருக்கிறது.
இதேபோல ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளிவரும் எல்மோண்டோ பத்திரிக்கையும் இதே தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. சமீபத்தில் 183 பேருடைய உடல்களில் இருந்து போன்ற உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டதாக அந்த பத்திரிக்கை கூறியிருக்கிறது.
ஏற்கனவே இதே தகவலை ஈராக்கில் உள்ள ஐ.நா. சபை தூதர் முகமது அல்ஹாகிம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



