"நாராயணா நாராயணா".. இறைவி படத்திற்காக ஆடிய சந்தோஷ்!
'இறைவி' படத்தின் ஒரு பாடலுக்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடியிருக்கிறாராம். பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் 'இறைவி'. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி என்று பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் தற்போது 'இறைவி', 'கபாலி', 'விஜய் 60', 'கொடி' உட்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதில் 'இறைவி' படத்தின் பாடல்கள் வருகின்ற 15 ம் தேதி வெளியாகிறது. 'இறைவி' படத்தில் ஒரு பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடியிருக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஆத்திச்சூடி' பாடலுக்கு விஜய் ஆண்டனியும், 'வாங்கண்ணா வணக்கங்கணா' பாடலுக்கு ஜி.வி.பிரகாஷும் நடனம் ஆடியிருந்தனர். இதேபோல 'இன்பம் பொங்கும் வெண்ணிலா', 'தீமைதான் வெல்லும்' பாடல்களுக்கு ஹிப்ஹாப் ஆதி நடனம் ஆடியிருந்தார். இதில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் இருவரும் நடிகர்களாக களமிறங்கி ஜொலித்து வருகின்றனர். ஹிப்ஹாப் ஆதியும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர்களின் வரிசையில் சந்தோஷ் நாராயணனும் இணைவாரா? பார்க்கலாம்.