Breaking News

84 உயிர்களை பறித்த வாகன தாக்குதலில் ஈடுபட்டவர் யார் ?

'பாஸ்டில் தினம்’ எனப்படும் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை நேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அவ்வகையில், மொனாக்கோ நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நீஸ் நகர மக்களும் நகரின் பிரதான சாலையில் கூட்டமாக திரண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அப்போது, அந்த சாலை வழியாக வேகமாக வந்த ஒரு கனரக வாகனம் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது.

வேகம் சற்றும் குறையாமல் திரளாக இருந்த மக்களை மோதித் தள்ளியபடி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் முன்னேறிச் சென்றது. இதில் ஏராளமான மக்கள் வாகனத்தின் டயர்களுக்கு அடியில் சிக்கி நசுங்கினர். தீவிரவாதிகளின் சதிவேலை என கருதப்படும் இந்த கொடூர தாக்குதலில் முதலில் 60 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அந்த கனரக வாகனத்தை ஓட்டி வந்தவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இன்று பிற்பகல் நிலவரப்படி, இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அந்த தீவிரவாதி ஓடிவந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், தாக்குதல் நடத்திய நபர் நீஸ் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. 31 வயதான அவர், துனிசியா நாட்டை சேர்ந்தவர் எனவும் பிரெஞ்சு குடியுரிமையுடன் அங்கு வசித்து வருவதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அவர்மீது தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான சந்தேகம் எதுவும் உளவுத்துறையினருக்கு இல்லாமல் இருந்ததாகவும், ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட சில கிரிமினல் வழக்குகளில் அந்நபருக்கு தொடர்பிருந்ததாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.