Breaking News

கேரளாவில் ஏ.டி.எமில் மைக்ரோ கேமரா பொருத்தி ரூ. 4,50,000 கொள்ளை! சர்வதேச ஹைடெக் கும்பல்

மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த ராபின்ஹூட் திரைப்படத்தில் ஏ.டி.எம். கொள்ளை பற்றி விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் அதைவிட நேர்த்தியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைவரிசை காட்டப்பட்டுள்ளது.

தங்களது மொபைல் போன்களுக்கு பணம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சியடைந்த வங்கி வாடிக்கையாளர்கள், காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

திருவனந்தபுரம் வெள்ளையம்பாளையம் அருகே அல்தாரா ஜங்சன் பகுதியில் இருந்த எ.டி.எம். மையத்தில் மோசடி பண பரிவர்த்தனை நடந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவலை சேகரித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் மும்பை விரைந்தனர்.

அங்கு ரோமானிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். விசாரணையில், ரோமானியாவில் இருந்து சுற்றுலாப் பயணியாக திருவனந்தபுரத்திற்கு  வந்த கிறிஸ்டைன் விக்டர், மரியான் கேப்ரியல்,புளோரின் ஆகியோர் இந்த ஹைடெக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஏ.டி.எம். இயந்திரத்தின் மேலே சிறிய கருவி ஒன்றை பொருத்தியுள்ளனர். அதில் மைக்ரோ கேமராவும் அடங்கியிருக்கிறது.

அந்த கேமரா வாடிக்கையாளர்களின் பாஸ்வேட்டையும், இதர கருவிகள் வங்கி கணக்கு பற்றி விபரங்களையும் சேகரித்துள்ளன.

அதை வைத்து பலரது வங்கி கணக்குகளில்இருந்து சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த கும்பல் சர்வதேச நாடுகள் பலவற்றில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் ஒருவரை கைது செய்த நிலையில் 2 பேர் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.