Breaking News

லண்டனில் மர்ம நபரின் கத்திக்குத்திற்கு இலக்காகி 6 படுகாயம், பெண் பலி


இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் ரூஸ்செல் சதுக்கம் (Russel square) உள்ளது. நேற்று இரவு 10-30 மணியளவில் ஒரு மர்ம மனிதன் கத்தியால் அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி குத்தியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்த 7 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

அவர் தவிர காயம் அடைந்த 6 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.

இரவு 10.40 மணிக்கு அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 19 வயது வாலிபரை போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

அதை தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டான். இச்சம்பவம் தீவிரவாத தாக்குதல் தொடர்புடயதாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.