Breaking News

மருந்துகலவையாளர்கள் நியமன விடயததில் கிழக்கு மாகாணத்துக்கான பாரபட்சம் கண்டிக்கத்தக்கது-கிழக்கு மாகாண முதலமைச்சர்

கடந்த  2013 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்  பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 56 மருந்துக் கலவையாளர்களுக்கான வெற்றிடம் இருக்கையில் 2 பேரை மாத்திரமே நியமித்திருப்பது  தமது மாகாணத்திற்கான புறக்கணிப்பு தொடர்வதாகவே கருத வேண்டியுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 56 மருந்துக்கலவையாளர்களுக்கான வெற்றிடம் காணப்படுகையில் அதில் அரைவாசி கூட இல்லாத 19 பேரை வழங்கி விட்டு மீண்டும் மத்திய அரசு 17 பேரை திருப்பிக் கோரியிருப்பது மாகாணத்தின் அதிகாரத்தை கொச்சைப்படுத்துவதாகவே எண்ணுகின்றேன்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்துக்கு  இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்படுவதுடன் மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள்  தாமதமின்றி உடனடியாக வழங்கப்பட   வேண்டிய தேவை இதன் மூலம் புலப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது

அத்துடன் இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் பி.ஜி மஹிபால மற்றும் சுகாதர அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  கடும் கண்டனத்தையும்  அதிருப்தியையும் வெளியிட்டதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்

அது மாத்திரமன்றி சனத்தொகை விகிதாரசப்படி நியாயமாக மருந்து கலவையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணத்துக்கு  32 பேரை நியமித்திருக்க வேண்டும்,

எவ்வாறாயினும் 2016 ஆம் ஆண்டின் ஆளணித்  தேவையையும் சேரந்து கணக்கிட்டால் எமக்கு தேவையான மருந்துக் கலவையாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே இவர்களை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமானால் எமக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய 32 பேரை வழங்கி விட்டு 17 பேரை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் ​  கொள்கின்றேன்.

அவ்வாறு அவர்கள் 17 பேரை பெற்றுக் கொள்ள முதலிலேயே எண்ணியிருந்தால் எமக்கு 49 மருந்துக் கலவையாளர்களை அவர்கள்  நியமித்திருக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி இவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு 2 பேரை மாத்திரம் நியமிப்பார்களானால் ஏனைய 378 பேரையும் எந்த நியாயத்தின் பிரகாரம் எங்கு நியமித்துள்ளீர்கள் என கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

மாகாணத்துக்கான தேவைகள்  அனைத்தையும் போராட்டங்களின் மூலமே பெற்றுக்  கொள்ள வேண்டியுள்ளமை  வேதனையளிப்பதுடன் கிழக்கு மக்களின் உரிமைகள பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான போராட்டங்களையும் சந்திக்க தயார் என்பதையும் உறுதியாக  கூறிக் கொள்ள  விரும்புகன்றேன்.

எமது மக்களும் ஏனைய மாகாண மக்களைப் போல சமமான வளங்களைப் பெற்று  மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்  என்பதே எனது  ஓரே நோக்கமாகும்.

மருந்துக்கலவையாளர்கள் நியமன விடயத்தில் எமக்கு நியாயம் நிலைநாட்டப்படாவிட்டால் சுகாதார அமைச்சு கிழக்கு மாகாணத்தின் உரிமைக்கான போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்